வேடசந்தூர், செப். 18: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், குருந்தம்பட்டி, புத்தூர், பூசாரிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை கனமழையும், இரவு முழுவதும் தொடர் சாரல் மழையும் பெய்தது. இந்நிலையில் குருந்தம்பட்டியை சேர்ந்த சலவை தொழிலாளி முருகன் (60) என்பவரது மண் சுவர் ஓடு பதித்த வீட்டின் ஒரு பகுதி சுவர் மழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் நேற்று அதிகாலை 4 மணியளவில் இடிந்து விழுந்தது.
இச்சம்பவத்தில் வீட்டில் மறு பகுதியில் தூங்கி கொண்டிருந்த முருகன் மற்றும் அவரது மனைவி சரசு (55), முருகனின் அண்ணன் மனைவி பெரியக்காள் (55) அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாதிக்கப்பட்ட முருகன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்த வீட்டினை பார்வையிட்டு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.