மூணாறு, ஆக. 18: ஓணம் தொகுப்பில் சர்க்கரை சேர்த்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது.கேரளாவில் ஓணப் பண்டிகையின்போது அனைவருக்கும் இலவசமாக உணவு பொருட்களின் தொகுப்பினை அரசு வழங்கி வருகிறது. இந்தாண்டு வரும் செப்.5 ல் ஓணம் கொண்டாடப்படும் நிலையில், தொகுப்பில் சர்க்கரையை சேர்த்து வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதே போல் பாசி பயறுக்கு பதில் தட்டப் பயறு வழங்கப்படுகிறது.
துணி பை உட்பட 15 வகை பொருட்கள் தொகுப்பில் இடம் பெறுகின்றன. அதன்படி சர்க்கரை ஒரு கிலோ, தேங்காய் எண்ணை 500 மி.லி, துவரம்பருப்பு, பாசி பருப்பு, தட்டப்பயறு, தேயிலை ஆகியவை 250 கிராம் வீதம், முந்திரி பருப்பு 50 கிராம், மில்மா நெய் 50 மி.லிட்டர், பாயாசம் மிக்ஸ் 200 கிராம், சாம்பார் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, மல்லி பொடி ஆகியவை 100 கிராம் வீதம், உப்பு ஒரு கிலோ துணிப் பை ஆகியவை வழங்கப்படுகிறது.