தேனி, அக். 17: தேனியில் உள்ள அரசு ஐடிஐயில் கட்டுமான தொழிலாளர்களுக்கு எலக்ட்ரீசியன் பிரிவில் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. தேனியில் உள்ள அரசு ஐடிஐயில், தமிழ்நாடு கட்டுமான கழகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆகிய இரு துறைகளுக்கு இடையே ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு எலக்ட்ரீசியன் பிரிவில் திறன் பயிற்சி கடந்த மாதம் 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஏழு நாட்கள் நடந்தது.
இப்பயிற்சியில் கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தொழிலாளர் உதவி ஆணையர் ராமராஜ் மற்றும் தேனி அரசு ஐடிஐ முதல்வர் சேகரன் ஆகியோர் பயிற்சி பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.

