தேனி, அக்.16: உத்தமபாளையம் அருகே காமிய கவுண்டன்பட்டியை சேர்ந்தவர்களுக்கு இணைய வழி பட்டா வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கம்பம் ஒன்றிய குழு சார்பாக நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மதனகோபால் தலைமை வகித்தார்.
ஒன்றிய துணைச் செயலாளர் தங்கம் மதனகோபால் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது, உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியில் கருமாரிபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட்ட கைமுறை பட்டாவை மாற்றி இணைய வழி பட்டா வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் பரமேஸ்வரன், தமிழ் பெருமாள், ராஜ்குமார், கல்யாணசுந்தரம், திருமலை கொழுந்து மணவாளன், பிச்சை மணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.