மூணாறு, ஆக. 15: கேரளா மாநிலம் மூணாறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊராட்சி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பிரபல சுற்றுலா தலமான மூணாறு ஊராட்சியை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் ஊராட்சியில் மின்விளக்குகளை சரி செய்ய வேண்டும், நகர்புறம் மற்றும் நீர் நிலைகளில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் உட்பட உள்ள கோரிக்கைகளை முன்வைத்து, ஊழலின் கூடாரமாக மாறிய ஊராட்சியின் ஆட்சியை கண்டித்தும் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஊராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்ட செயலாளர் கே.சலீம்குமார் துவக்கி வைத்து பேசினார். மேலும், கண்டன ஊர்வலத்திலும் முற்றுகை போராட்டத்திலும் எம்.ஒய்.அவுசேப், பி. முத்துபாண்டி, ஜி.என்.குருநாதன், வழக்கறிஞர்.சந்திரபால், எம்.செல்வராஜ், பி.காமராஜ், டி.எம் முருகன், உமா ரமேஷ், தமிழரசன், டி.ராஜா மற்றும் ஜில்லா, ப்ளோக், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஏராளமான தொண்டர்கள் பங்கெடுத்தனர்.