மூணாறு, அக். 13: கேரள மாநிலம் மூணாறு அருகே அடிமாலியில் உள்ள பாரத்தோடு பகுதியைச் சேர்ந்தவர் அப்பச்சன் (81). இவர் கடந்த 10ம் தேதி மதியம் அரசு மதுபானக்கடையில் அரை லிட்டர் மதுபானம் வாங்கிக் கொண்டு பேருந்திற்காக நின்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல், தங்களை கலால் துறை அதிகாரிகள் என கூறியுள்ளது. மேலும், அவரிடம் மதுபானத்தைப் பறிமுதல் செய்ய வந்துள்ளோம் என்றும், வழக்கு பதியாமல் இருக்க பணம் வேண்டும் என்றும் தெரிவித்தனர். பயந்து போன முதியவர் தன்னிடம் இருந்த ரூ.3000 பணத்தை கொடுத்துள்ளார். அவர்கள் சென்ற பிறகே இது மோசடி கும்பல் என்று அவருக்கு புரிந்தது. அதைத் தொடர்ந்து, அவர் அடிமாலி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் கலால்துறை அதிகாரிகள் என கூறி பணம் பறித்தது மேனோத் சினு (34), புத்தன்புரக்கல் பாபு (43) மற்றும் பாறக்கல் சக்கீர் ஹூசைன் (39) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் மூன்று பேரையும் நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர்.
+
Advertisement