வருசநாடு, அக்.11: கடமலை-மயிலை ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, பொன்னன்படுகை, தங்கம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இப்பகுதிகளில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதிமக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே ஒவ்வொரு கிராமங்கள்தோறும் கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.