சின்னமனூர், செப். 10: சின்னமனூர் அருகே பூமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் சமுத்திரராஜ்(35). இவர் பிறவியிலேயே பார்வைக் குறைபாடு கொண்டவர் என கூறப்படுகிறது. டெட் தேர்விற்கு தயாராகி வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் காமாட்சிபுரம் நோக்கி சென்றார். அப்போது வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. இதையடுத்து தந்தையை பெட்ரோல் வாங்க அனுப்பிவிட்டு வாகனத்துடன் ஓரமாக நின்றிருந்தார்.
அப்போது அந்த வழியாக வேப்பம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சின்னத்தம்பி (55) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் சமுத்திர ராஜ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அவருக்கு தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரில் ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.