கம்பம், செப். 10: அரசு போக்குவரத்து கழகம் கம்பம் பணிமனை 1ல் டிரைவராக பணிபுரிபவர் பாலமுருகன். இவர் கம்பம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சை கம்பம் மெட்டுச் சாலை வழியாக ஓட்டி சென்றார். அப்போது பழைய வணிகவரி சோதனை சாவடி அருகே வளைவில் சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி பஸ்சை மோதும் விதமாக வந்தது.
இதனை கண்டு சுதாரித்து கொண்ட பாலமுருகன் சாலையின் இடதுபுறம் வளைத்துள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்த மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து மோதியது. இதில் அந்த மின் கம்பம் உடைந்து பஸ் மீது விழுந்தது. பஸ் மோதிய வேகத்தில் மின்கம்பம் உடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.