தேனி, அக்.9: பெரியகுளத்தில் பழமையான மந்தை அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில், பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்தினர். பெரியகுளம் அருகே கீழ வடகரை ஊராட்சிக்குட்பட்ட தெய்வேந்திரபுரம் பகுதியில் பழமையான மந்தை அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் புரட்டாசி மாத 3 நாள் திருவிழாவிற்க்கான சாட்டுதல் கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. கோயில் திருவிழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் இரவு பெரியகுளத்தில் உள்ள வராக நதி ஆற்றங்கரைக்குச் சென்று அங்கு மலர்களால் மந்தை அம்மன் திருவுருவச் சிலையை அலங்கரித்து எடுத்து, சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா வந்தனர். பெரியகுளம் வடகரை பகுதியில் உள்ள, ஆடு பாலம், தேரடி வீதி, அரண்மனை தெரு, வைத்தியநாதபுரம், பெருமாள்புரம், உள்ளிட்ட தெருக்களின் வழியாக மந்தை அம்மன் கோயிலை வந்தடைந்தனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
+
Advertisement