போடி, ஆக, 9: குறுவட்ட போட்டியில் சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். போடியில் அரசு உதவி பெறும் ஜமீன்தாரணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளியில் குறு வட்ட விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடை பெற்றது. 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான இந்த விளையாட்டுப் போட்டி மாவட்ட அளவில் அனைத்து பள்ளிகளும் பங்கேற்று விளையாடின. இந்தப் பள்ளியில் போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த குறு வட்ட போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர்.
இதில் சிறந்த பள்ளியாக சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
குறிப்பாக தடகளம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. அதற்காக விளையாட்டு வீரர்களின் வெற்றிக்காகப் பயிற்சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தெய்வேந்திரன், ஆசிரியை பிரியதர்ஷினி ஆகியோரையும், வெற்றி பெற்ற வீரர்களையும் தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.