தேனி, ஆக. 9: கோவை, ஈச்சனேரியில் குடியிருப்பவர் மாரியப்பன் மனைவி கிருஷ்ணம்மாள் (85). இவர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருக்கு சொந்தமாக பெரியகுளம், தென்கரை மாரியம்மன் கோயில் சன்னதி தெருவில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் இளைய மகன் பழனிகுமார் வசித்து வருகிறார்.
கோவையில் குடியிருந்து வந்த மூதாட்டி கிருஷ்ணம்மாள் சுற்றுச்சூழல் காரணமாக பெரியகுளத்தில் உள்ள அவர்களது சொந்த வீட்டில் குடியிருக்க வந்தார். ஆனால் வீட்டில் குடியிருக்கும் இளைய மகன் பழனிகுமாரும் அவரது மனைவி மலர் விழியும் மூதாட்டியை வீட்டிற்குள் அனுமதிக்காமல் அவமதித்து வெளியேற்றியுள்ளனர்.
இதனால் தங்களது சொந்த வீட்டிலேயே குடியிருக்க முடியாமல் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று தங்கி வந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணம்மாள் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இப் புகாரின் பேரில் போலீசார் பழனி குமார் மற்றும் அவரது மனைவி மலர்விழி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .