வருசநாடு, அக்.9: வருசநாடு அருகே முதல்வரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலையை சேதப்படுத்திய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியம் பாலசுப்பிரமணியபுரம் ரோடு முதல் கவுண்டர் குடிசை பகுதிக்கு செல்லும் ரோடு வரை சாலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. பணியில் ஜல்லி கற்கள் கலவை கொட்டப்பட்டு சமப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் காமராஜபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(55) வனராஜ் (52), ஆகியோர் புதிய ரோடு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜல்லி கற்கள் பரப்பி அமைக்கப்பட்ட சாலையை மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டி சேதப்படுத்தினர். இது குறித்து பிடிஓ மாணிக்கம் கொடுத்த புகாரில், வருசநாடு போலீசார் ரோட்டை சேதப்படுத்திய மணிகண்டன், வனராஜ், தங்கம்மாள் புரத்தைச் சேர்ந்த உதய பாண்டி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.