தேனி, ஆக. 8: பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நகர்மன்ற கூட்ட அரங்கில், நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் தமிஹாசுல்த்தானா, நகராட்சி பொறியாளர் சந்தோஷ்குமார், மேலாளர் தியாகராஜன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின்போது, 10வது வார்டு திமுக கவுன்சிலர் ஆபிதாபேகம், பெரியகுளம் புதிய பஸ்நிலையம் எதிரே செயல்படும் தனியார் மதுபானக் கூடத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர், பஸ்நிலையம் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி நகர்மன்றத் தலைவர் இருக்கை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது, இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என நகர்மன்றத் தலைவர் தெரிவித்தபோதும், கவுன்சிலர் ஆபிதாபேகம் தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தார். இதனையடுத்து, நகர்மன்றத் தலைவர் சுமிதாசிவக்குமார், மதுபானக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, கவுன்சிலர் போராட்டத்தை விட்டு இருக்கைக்கு சென்றார். இதனால் நகர்மன்றக் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.