தேனி, நவ. 6: தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சாகுல் ஹமீது (59). இவர் தேனியில் உள்ள ஒரு தனியார் டிராக்டர் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஆணைய புறவழிச்சாலையில் தேனி நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார்.
முத்துதேவன்பட்டி பகுதியில் பாலம் அருகே வந்தபோது, காற்றாலை உபகரணங்களை கொண்டு செல்லும் ராஜஸ்தான் மாநில லாரியில் டூவீலர் மோதியது. இதில் லாரியின் பின் சக்கரம் ஏறியதில் சாகுல் ஹமீது தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த வீரபாண்டி போலீசார் உயிரிழந்தவரின் பிரேத உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
