தேனி, ஆக.6: பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 50 அடியாக குறைந்தது. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சோத்துப்பாறை அணை உள்ளது. மொத்தம் 126.28 அடி உயரமுள்ள இந்த அணையில் தேக்கப்படும் நீரினை கொண்டு, தினந்தோறும் நகராட்சி பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நடப்பாண்டில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்யாததால், அணைக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 126.28 அடியில், தற்போது நீர்மட்டம் 50 அடிக்கும் கீழ் குறைந்து 49.13 அடியாக உள்ளது.
அணையில் நீர் இருப்பு 15.34 மில்லியன் கனஅடியாக உள்ள நிலையில் பெரியகுளம் நகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டி உபநீர் வெளியேறி வந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் சரிந்துள்ளதால் விவசாயிகளை கவலை அடைந்துள்ளனர்.