ரெட்டியார்சத்திரம், அக். 4: ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான கன்னிவாடி, தருமத்துப்பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் வேட்டையாடப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கன்னிவாடி அருகே காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய கரூர் மாவட்டம், தோகமலை பகுதியை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று தருமத்துப்பட்டி அருகே ஸ்ரீ முனியாண்டி கோயில் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் பெண் கடமானும் மற்றும் அதே பகுதியில் தீட்டு புலி என்ற இடத்தில் உள்ள தனியார் கிணற்றில் பெண் மானும் இறந்த நிலையில் கிடந்தன.
தகவலறிந்து வந்த கன்னிவாடி வனத்துறையினர் கிணறுகளில் இருந்து மான்களின் உடல்களை மீட்டனர். பின்னர் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்து மான்களின் உடல்களை வனப்பகுதிக்குள் புதைத்தனர். மேலும் வனத்துறையினர் இறந்த மான்கள் தண்ணீர் தேடி வந்த போது கிணற்றில் தவறி விழுந்ததா அல்லது வேட்டை சம்பவத்தில் தப்பி வந்து தவறி விழுந்ததா என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.