தேவதானப்பட்டி, அக். 4: தேவதானப்பட்டி அருகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி மேல்மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் ஊராட்சி 12வது வார்டு அம்மாபட்டி தெருவில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஆலமரத்து முனியாண்டிகோயிலில் இருந்து மேல்மங்கலம் பஸ் ஸ்டாப் வரை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு பொதுப்பாதை 15 அடி அகலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த பொதுப்பாதையில் சரக்கு வாகனங்கள், கார், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவந்தன. இந்நிலையில் தனியார் சிலர் வீட்டின் முன்பு இரும்பு வேலி அமைத்து, பொதுப்பாதையை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மேல்மங்கலம் ஊராட்சிமன்ற நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மேல்மங்கலம் அம்மாபட்டி தெருவைச் சேர்ந்தவர்கள், மேல்மங்கலம் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ஜெயமங்கலம் காவல் நிலைய எஸ்.ஐ முருகபெருமாள், விஏஓ ராஜவேல் மற்றும் போலீசார், முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகை கைவிடப்பட்டது.