கம்பம்:தேனி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகராட்சியாக கம்பம் உள்ளது. இதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக, கம்பத்தை நோக்கியே வணிகர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில் கம்பத்தில், சிறுவர்களுக்கான தின்பண்டங்கள் விற்பனை செய்யும் சில கடைகளில் பல்வேறு ராசயன கலவை சேர்க்கப்பட்ட்ட மற்றும் சீன இறக்குமதி மிட்டாய்கள், சாக்லேட்டுகள், கார வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகள் என ஏராளமானவை விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றின் மூலம் கடைக்காரர்களுக்கு அதிக இலாபம் கிடைப்பதால் போலி தின்பண்டங்களை அதிகளவில் வாங்கி விற்கின்றனர். இவற்றை கடைகளில் வாங்கி உண்ணும் குழந்தைகளுக்கு ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நச்சு பொருட்கள், இம்மாதிரியான தின்பண்டங்களில் அதிகம் இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். ஆகையால் ரசாயனம் கலந்த தின்பண்ட விற்பனையைத் தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.