சின்னமனூர், ஜூலை 26: சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் அனைத்துப் பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் குச்சனூர் ராஜபாளையம் பகுதி மெயின் ரோட்டில் ஆழ்குழாய் மோட்டார் இணைக்கப்பட்டு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இதற்கான பணிகள் முடிவடைந்து சில மாதங்கள் கடந்த பின்னரும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப் படாமல் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி பயன்பாட்டுக்கு வந்தால் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் பயனடைவார்கள். எனவே பொதுமக்கள், பயணிகள் நலன் கருதி தண்ணீர் தொட்டியை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.