கம்பம் ஜூலை 31: கம்பம் சர்ச் தெருவை சேர்ந்தவர்கள் குணா(34), மார்க்ராஜா (34). தாத்தப்பன்குளத்தைச் சேர்ந்தவர் முகமது பாசில்(34). பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் சில நாட்களுக்கு முன்பு கம்பம் புதிய பஸ் நிலையம் அருகே பேசிகொண்டிருக்கும் போது குணாவிற்கும் மார்க்ராஜாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதில் குணாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், சர்ச் தெருவில் மார்க்ராஜா, சுரேஷ்குமார் என்பவருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த முகமது பாசில் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களை தாக்க முயன்றார். இதில் மார்க்ராஜா, சுரேஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் இருவரும் சேர்ந்து முகமது பாசிலிடம் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது முகமது பாசிலுக்கும் காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 3 பேருக்கும் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.