தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது: கலெக்டர் தகவல்
தேனி, ஆக. 2: தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் இன்று (ஆக. 2ம்தேதி) தொடங்க உள்ளது. கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நடந்தபோது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திருக்குறளில் ஆர்வமும், புலமையும் உள்ள ஆசிரியர்கள், பயிற்றுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடக்க திட்டம் வகுக்கப்படும் எனவும் அறிவித்தார்.
இதன்படி,தேனி மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்டத்தின் கீழ் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் தேனி, பெரியகுளம், கம்பம் ஆகிய பகுதிகளில் 3 குழுக்கள் அமைத்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. தேனியில் உள்ள நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பெரியகுளம் தென்கரையில் உள்ள எட்வர்டு நினைவு நடுநிலைப்பள்ளியிலும், கம்பத்தில் ஸ்ரீமுக்திவிநாயகர் நடுநிலைப்பள்ளியிலும் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் இன்று (2ம்தேதி) முதல் நடத்தப்பட உள்ளன.
இந்த பயிற்சி வகுப்புகள் பயிற்சிக் கட்டணம் ஏதுமின்றி ஆண்டுக்கு 30 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிறைவு நாளில் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் tamilvalar.thn@tn.gov.in உள்ளது. என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 04546-251030 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.