கூடலூர், ஜூலை 25: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை காரணமாக, பெரியாறு அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல்சாகுபடி நடக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று முன் தினம் அணையின் நீர்வரத்து 2131 கனஅடியாக இருந்தது.
நேற்று முன் தினம் இரவு பெய்த மழையால் நேற்று காலை அணைக்கு நீர்வரத்து 2000 கனஅடி அதிகரித்து 4000 கனஅடியாக உயர்ந்துள்ளது. 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 130.90 அடியாக உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 4907 மில்லியன் கனஅடி. தமிழகத்திற்கு வினாடிக்கு 1867 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதன்மூலம் லோயர்கேம்ப் நீர்மின்நிலையத்தில் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.