கம்பம், செப். 30: கம்பம் ஆசாரிமார் தெருவை சார்ந்தவர் வெங்கடேசன் (60). இவர் கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் மளிகை கடை ஒன்றினை நடத்தி வருகிறார். நாள் தோறும் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன் படி நேற்று இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்ற போது, கடையில் இருந்து புகை கசிந்துள்ளது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உரிமையாளர் வெங்கடேசன் தகவல் அளித்துள்ளனர். மேலும் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைவதற்குள், கடை முழுவதும் தீப்பிடித்து எரிய துவங்கியது.
விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால், அடுத்தடுத்த இடங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. அதே சமயம் இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இது குறித்த தகவலறிந்த தேனி எம்பி தமிழ் செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து கடையை பார்வையிட்டு, தீ விபத்து குறித்து கடை உரிமையாளரிடம் கேட்டறிந்து, அவருக்கு ஆறுதல் கூறினார். உடன் மதிமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், துணிந்து நில் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் வேல் பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.