Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மானாவாரியில் எள் பயிரிட்டு அதிக விளைச்சல் பெறலாம் வேளாண் அதிகாரிகள் ஆலோசனை

சின்னமனூர், நவ.26: மானாவாரியில் எள் பயிரிட்டு அதிக விளைச்சல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது: வறட்சியை தாங்கி வளரக்கூடிய குறுகியகால மானாவாரி பயிராக எள் விளங்குகிறது. எள் சாகுபடியில் சில நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மகசூலை அதிகரிக்க முடியும். குறுகியகால ரகங்களான டிஎம்.வி.3,4,5,6, டி.எம்.வி.(எஸ்.வி.) 7,வி.ஆர்.ஐ. (எஸ்வி.) 1, கோ-1 ரகங்களை பயிரிடலாம். தேர்வு செய்யப்படும் ரகங்களுக்கு இனத்தூய்மை முக்கியமானது.

அவ்வாறு இல்லாவிட்டால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாகிவிடும். இதை தடுக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் விதையுடன் கலந்து பாலித்தீன் பையில் போட்டு 24 மணிநேரம் வைத்து, பின்னர் அசோஸ்பைரில்லம் எனும் நுண்ணுயிர் கலவையை 200 மி.லி. ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து 30 நிமிடம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். பொதுப்பரிந்துரைப்படி எக்டேருக்கு 23 கிலோ தழைச்சத்து, 13 கிலோ மணிச்சத்து, 13 கிலோ சாம்பல் சத்து வீதம் அடி உரமாக முழு அளவையும் விதைக்கும் முன் தூவ வேண்டும். இது தவிர நிலத்தின் தன்மைக்கு ஏற்ப 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை 15 கிலோ மணல் கலந்து தூவ வேண்டும். இதனால், காய்கள் ஒரே சமயத்தில் திரட்சியாக முதிர்வதற்கு வழி செய்கிறது.

விதைத்த 3ம் நாள் அலக்குலர் என்ற களைக் கொல்லியை 1 எக்டேருக்கு 20 கிலோ என்ற அளவில் மணல் கலந்து தூவினால் சாரணை போன்ற களையை கட்டுப்படுத்தலாம். விதைத்த 15 மற்றும் 35ம் நாள் என 2 முறை களை எடுக்க வேண்டும். கொண்டைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 400 கிராம் கார்பரிலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைத்த 25, 35 மற்றும் 50ம் நாளில் தெளிக்க வேண்டும். பூவிதழ் நோய் தென்பட்டால் ஏக்கருக்கு 200 மி.லி. மிதைல்டெமடான் அல்லது 800 குயினால் பாஸ் மருந்து தெளிக்கவும். மேலும் உரிய பயிர் பாதுகாப்பு செய்தால் நல்ல விளைச்சலை பெறலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.