சின்னமனூர், நவ.26: தேனி அல்லிநகரம் அம்பேத்கர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சந்தோஷம்(26). தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை காமராஜ் பாண்டியன் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டி மின் வாரியத்தில் பணி புரிந்து வருகிறார். அவரைப் பார்ப்பதற்காக சந்தோஷம் புல்லட்டில் சென்றார். மீண்டும் மாலை 6.30 மணி அளவில் அங்கிருந்து அல்லி நகரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். தென்பழனி-சின்னமனூர் சாலையில், அப்பிபட்டி நான்குரோடு பிரிவினை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் சந்தோஷம் மனைவி சந்தியா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

