Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அக்காள் கணவரை கொன்றவருக்கு ஆயுள்

தேனி, நவ.26: பெரியகுளம் அருகே அக்காள் கணவனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபால்(48). இவரது மனைவி தங்கமலை(43). தேனி அருகே சங்ககோணாம்பட்டியில் தங்கமலைக்கு சொந்தமான வீட்டுமனை இடம் அருகே, தங்கமலையின் சகோதரர் ஜெயராம்(45) குடியிருந்து வந்தார். தங்கமலைக்கு சொந்தமான இடத்தை ஜெயராம் வாங்க நினைத்திருந்தார். இந்நிலையில், அந்த இடத்தை தங்கமலை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்தார். இதனால் ஜெயராமுக்கும், தங்கமலைக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்.27ம் தேதியன்று, தங்கமலை மற்றும் கணவர் ஜெயபால், வீட்டை வாங்கியவர்களுக்கு அளந்து கொடுப்பதற்காக வந்தனர். அப்போது, ஜெயராம் மற்றும் அவரது மனைவி முத்துப்பிரியா ஆகியோர் தகராறு செய்தனர். அப்போது, ஜெயராம் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியால், அவரது அக்காள் கணவரான ஜெயபாலை முதுகில் குத்தினார். இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் ஜெயராம், அவரது மனைவி முத்துப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அனுராதா முன்னிலையில் நடந்து வந்தது.

அரசு தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், முத்துப்பிரியாவை வழக்கில் இருந்து விடுவித்தும், ஜெயராமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.