மூணாறு, செப். 23: பிரபல சுற்றுலாத்தலமான மூணாறுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பழைய மூணாறில் ஹைடல் பார்க் அருகே உள்ள சாலையின் ஒரு பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இது வாகன ஓட்டிகள் மற்றும் கால்நடை பயணிகளுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. ஒன்றரை வருடம் முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 10 மீட்டர் சாலையை கான்கீரிட் செய்திருந்த நிலையில் இவை தற்போது உடைந்து சாலையில் பெரும் குழிகள் உருவாகின.
லட்சுமி எஸ்டேட் மற்றும் பழைய மூணாறு எஸ்டேட் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் சாலையில் உள்ள குழிகளில் தேங்கி கிடப்பது தெரியாமல் வாகனங்கள் குழிகளில் சிக்கி விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது. பெரும்பாலும் டூவீலரில் செல்வோர் இப்பகுதியில் உள்ள குழிகளில் சிக்கி அதிகளவில் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.