தேனி, செப். 23: தேனி அருகே பழனி செட்டி பட்டியில் தடுப்பணை பகுதியில் சலவைக்கூடம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சலவை தொழிலாளர்கள் தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வனிடம் அளித்தனர்.பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சார்பில் முல்லைப் பெரியாறு தடுப்பணை அருகே உள்ள கருப்பசாமி கோயிலில் நடந்த தூய்மை பணியாளர்களுக்கான உணவு விருந்து துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி தொகுதி எம்பியுமான தங்கதமிழ்ச்செல்வன் சலவை செய்யும் பகுதியான தடுப்பணை கடந்து சென்றார்.
அப்போது, பழனிசெட்டிபட்டி சலவை தொழிலாளர் சமூக நலச் சங்கத்தின் நிர்வாகிகள் பரமன், பழனியாண்டவர், மணிமாறன் உள்ளிட்டோர் தங்கதமிழ்ச்செல்வன் எம்பி யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில், பழனிசெட்டிபட்டி வண்ணாரகள் கடந்த 20 ஆண்டுகளாக சலவை செய்யும் இடத்திற்கு படித்துறை மற்றும் துணி வைக்கும் அறை கட்டித் தருமாறு அரசுக்கு மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, பாராளுமன்ற தொகுதி உறுப்பினருக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து இப்பகுதியில் சலவை செய்யும் படித்துறை மற்றும் துணி வைக்கும் வரை கட்டித் தர வேண்டும் என வலியுறுத்தினர். விரைவில் இப்பகுதி சலவை தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரப்படும் என எம்பி உறுதி அளித்தார்.