மூணாறு, ஆக. 19: இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பலபகுதிகளில் பலத்த மழை தொடர்வதால் மூணாறு காலனி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர். குறிப்பிட்ட சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக முதிரப்புழை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், மழை காரணமாக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக இடுக்கியில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
தற்போது, கல்லார்குட்டி, மாட்டுப்பெட்டி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் பாகமாக உள்ள தேவிகுளம் கேப் சாலையில் இரவு நேர பயணத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மூணாறு நகரில் ஆர்.ஓ சந்திப்பு அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மன்சரிவு ஏற்பட்ட இடத்தில் கனமழை காரணமாக நேற்று காலை அங்கு மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சாலையோர நான்கு கடைகள் சேதம் அடைந்தது. ஏற்கனவே கடைகளை அடைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.