வருசநாடு, டிச. 12: கடமலைக்குண்டு ஊராட்சி பட்டாளம்மன் கோவில் தெரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தனியார் மண்டபங்களில் அதிக வாடகைக்கு வசந்தவிழா, காதணி விழா, திருமண விழா உள்ளிட்ட விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக அந்த பகுதியைவிட்டு வெளியே உள்ள கிராமத்தில் உள்ள தனியார் மண்டபங்களில் இல்ல விழாக்களை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய சமுதாயக்கூடம் வேண்டி பல கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கடமலைக்குண்டு 5வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் உமா மகேஸ்வரி வேல்முருகன் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் ஏழை எளியோர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனால் தனியார் மண்டபங்களில் அதிக வாடகைகள் கொடுத்து விழா நடத்துவது மிகவும் சிரமமாக இருக்கிறது. மேலும் ஒவ்வொரு மழை காலங்களில் வீடுகளில் பந்தல் அமைத்து பலத்த செலவுகள் ஏற்படுகிறது. எனவே புதிய சமுதாயக்கூடம் கட்டி கொடுத்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். இதேபோல் புதிய ரேஷன் கடை தனியாக அமைத்து தர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகன் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்றார்.


