கம்பம், டிச.7: கம்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் வழங்கினார். கம்பத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பம் காமாட்சியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் ஸ்கூட்டர் 9 பேருக்கும், சைக்கிள் 1 நபருக்கும், காது கேட்பான் கருவி 10 பேருக்கும் மற்றும் ஊன்றுகோல் 4 பேர் என 24 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் காமாட்சி, கம்பம் வடக்கு நகர செயலாளர்கள் வீரபாண்டியன், பால்பாண்டி ராஜா (தெற்கு) மற்றும் தேனீக்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியடைந்தனர். விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


