Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்துக்காக சுவாமி, அம்பாள் தேர்கள் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

நெல்லை,ஜூன்23: நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டத்துக்காக சுவாமி, அம்பாள் தேர்களை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சியடித்து சுத்தப்படுத்தும் பணியை மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து தேர்கள் சுத்தப்படுத்தப்பட்டன. தென் மாவட்டத்தில் நெல்லை டவுனில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை தமிழ் ஆண்டு முழுவதும் நம் முன்னோர்கள் வகுத்த ஆகம விதிமுறை அடிப்படையில் பல்வேறு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புகளை உடைய நெல்லையப்பர் கோயிலில் வரும் 30ம் தேதி ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்குகிறது. இவ்விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழாவையொட்டி தினமும் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை காலை மற்றும் மாலையில் நடைபெறும்.

இதைதொடர்ந்து இரவு சுவாமி, அம்பாள் உள்பட பஞ்ச மூர்த்திகள் ரதவீதி வலம் நடைபெறும். திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக ஜூலை 8ம் தேதி தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என்ற பெருமையுடைய சுவாமி நெல்லையப்பர் தேர் உள்பட அம்பாள் காந்திமதி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்பட 5 தேர்களும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.

தேரோட்ட திருவிழாவுக்காக நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் தேர்களை சுத்தப்படுத்தும் பணி நேற்று துவங்கியது. தீயணைப்பு வண்டிகள் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து வீரர்கள் தேர்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இப்பணியை நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன், சுகாதார ஆய்வாளர் முருகன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் காசி மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், டவுன் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் சுவாமி, அம்பாள் அனுப்பு மண்டபம் மரசிற்பங்கள், கதவுகளும் சுத்தப்படும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேர்கள் தேரோட்டத்துக்கு அழகுபடுத்தும் பணி நடைபெறும்.