செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் ஸ்டெச்சரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம்: போதுமான படுக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை
செங்கல்பட்டு, ஜூலை 11: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் போதுமான படுக்கை வசதியில்லாததால் நோயாளிகளுக்கு ஸ்டெச்சரிலேயே சிகிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிருந்து மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பலதரப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு வந்து செல்கின்றனர். அதேபோல், செங்கல்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பிரசவம் மற்றும் விபத்தில் சிக்கியவர்கள் வெட்டு குத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்காக தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கேசுவாலிட்டி கட்டிடம் என்று அழைக்கப்படும் புதிய கட்டிடத்தில் அவசர சிகிச்சைப் பிரிவு அமைந்துள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் இயங்கும். இங்குதான் சாலைவிபத்து, நெஞ்சுவலி, மாரடைப்புநோய், காய்ச்சல், அடிதடி வெட்டுக்குத்து மற்றும் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க முயற்சிக்கும் போது கைகால்கள் முறிவு ஏற்பட்டு அவர்களுக்கு மாவுகட்டு போடுவதற்காக அழைத்து வருவது என பலதரப்பட்ட சிகிச்சைக்கு இந்த அவசர சிகிச்சை பிரிவுக்கு வருகின்றனர்.
இங்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாததால் ஸ்டெச்சரிலேயே நோயாளிகள் காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதனால் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு ஏற்கனவே சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை சாதாரண வார்டுக்கு அனுப்பிய பிறகுதான் காத்திருக்கும் நோயாளிகளுக்கு படுக்கை கிடைக்கும் நிலை உள்ளதால் வேறு வழியில்லாமல் ஸ்டெச்சரில் வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரச சிகிச்சை பிரிவுக்கு தேவையான படுக்கை வசதியினை ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.