திருப்பூர், ஜூலை 11: நெருப்பொிச்சல், வாவிபாளையம் அனைத்து அரசியல் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், குடியிருப்போர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:நெருப்பெரிச்சல் ஜி.என்.கார்டன் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் மாநகர பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இப்படி பாறைக்குழியில் குப்பை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் அங்கு ஏராளமான குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், அப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம்,ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம், பள்ளிக்கூடங்கள், வணிக வளாகங்கள் ஆகியவைகளும் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகளை பாதுகாப்பாக கையாள்வதை விடுத்து,மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் மாநகராட்சி குப்பைகளை கொட்டுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் பாறைக்குழியில் குப்பை கொட்டுவதை நிறுத்த ஆவண செய்ய வேண்டும்.இதுபோல் மாநகராட்சிக்கு குப்பைகள் கொட்ட வழங்கப்பட்ட உத்தரவில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை மட்டுமே பாறைக்குழியில் அறிவியல் பூர்வமாக கையாள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.ஆனால் அவ்வாறு கொட்டப்படுவது இல்லை. எனவே குப்பைகள் கொட்ட வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.