பொன்னமராவதி, ஜூலை 23: பொன்னமராவதியில் ரூ.2.17 கோடியில் கட்டப்பட்டுள்ள வாரச்சந்தை பயன்பாட்டிற்கு வந்தது. பொன்னமராவதி பேரூராட்சியில் பேருந்து நிலையம் பின்புறம் செயல்பட்டு வந்த வாரசந்தையில் சனி மற்றும் செவ்வாய் கிழமைகளில் சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தை பகுதி மழைக்காலங்களில் மிகவும் மோசமாக கிடந்தது. இந்த சந்தையை மேம்பாடு செய்து புதிதாக கட்டவேண்டும் என இப்பகுதி விவசாயிகள்,வியாபாரிகள்,பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.கோரிக்கை ஏற்கப்பட்டு அமைச்சர் ரகுபதியின் முயற்சியால் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் மூலம் ரூ.2.17 கோடியில் பொன்னமராவதியில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஜூன்-11ம் தேதி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு துணை முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை மக்கள் பயன்பாட்டிற்கு வந்து கடந்த சனிக்கிழமை குறைவான கடைகள் போடப்பட்டிருந்தது. நேற்று செவ்வாய் கிழமை சந்தையில் அனைத்து கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. புதிதாக கட்டப்பட்டு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு வந்த சந்தைக்கு பொதுமக்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.