திருக்காட்டுப்பள்ளி, ஆக.30: கல்லணையில் தீயணைப்புமீட்பு துணைநிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. இது சுற்றுலா தலமாக இருப்பதால் புராதன சின்னங்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா ஆகியவற்றை பார்வையிட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது விவசாய பாசனத்திற்காக கல்லணை கால்வாய் மற்றும் துணை ஆறுகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆறுகளில் குளிக்கும் போது ஒரு சிலர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கி விடுகின்றனர். இவர்களை மீட்க திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வர வேண்டியுள்ளது. கல்லணையிலேயே துணை தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர் இருந்தால் இவர்களை உடனடியாக காப்பாற்ற முடியும். எனவே கல்லணையில் துணைதீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.