தஞ்சாவூர், ஆக.29: தஞ்சாவூர் மாவட்டம் காராமணி தோப்பு குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பொய்யுண்டார்கோட்டை அருகே காராமணி தோப்பு வடக்கு தெரு பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும்அனைவரும் விவசாய தொழிலையே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் வீடு புகுந்து உணவு தானியங்களை சேதப்படுத்தி விவசாய பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. குறிப்பாக கடலை உளுந்து தென்னை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகிறது. இதனால் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்தப் பகுதியில் சுற்றி தெரியும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.