பேராவூரணி, ஆக.29: பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பின்னவாசல், பைங்கால், சொர்ணக்காடு, வளப்பிரம்மன்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படப்பனார்வயலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் எம்எல்ஏ அசோக்குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது, அரசு திட்டங்கள் குறித்து பேசிய அவர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.7.5 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார். முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை வழங்கினர். இதில், பட்டுக்கோட்டை ஆர்டிஓ சங்கர், பேராவூரணி தாசில்தார் சுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், செல்வேந்திரன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், திமுக பேராவூரணி தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.