பட்டுக்கோட்டை, செப்.27: பட்டுக்கோட்டையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 618 மனுக்கள் பெறப்பட்டன. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
பட்டுக்கோட்டை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியாசெந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தொடங்கி வைத்தனர். நகர திமுக செயலாளர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் கனிராஜ், நகராட்சி கணினி உதவி திட்ட மேலாளர் எட்வின்ஆரோக்கியராஜ், நகராட்சி கவுன்சிலர்கள் லதாஆன்ட்ரோஸ், முருகேசன், ரகுராமன் மற்றும் 13 அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் பட்டுக்கோட்டை நகராட்சி 28, 29, 30 ஆகிய 3 வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மொத்தம் 618 மனுக்கள் பெறப்பட்டது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 273 பேர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 38 பேர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு 21 பேர், தகவல் தொழில்நுட்பத்தில் 7 பேரும், வருவாய்த்துறைக்கு 154 பேரும், நகராட்சி நிர்வாகம் 55 பேர் என்று 618 மனுக்கள் பெறப்பட்டது.