திருவிடைமருதூர் அருகே 30க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: நோய்த்தொற்று அபாயத்தால் மக்கள் அச்சம்
தஞ்சாவூர், அக்.24: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே கருப்பூர் அய்யனார் கோயில் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை வசதி மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் வடிய ஏதுவாக எந்த அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி தராததால் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இந்த பகுதியில் சுமார் 200 மீட்டர் தூரம் சாலை முழுவதும் தண்ணீர் தேக்கமடைந்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இந்த மழைநீர் வடியாததால் துர்நாற்றம் வீசி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இருக்கக்கூடிய இந்த பகுதியில் மழைநீர் வடியாத காரணத்தால் பொதுமக்கள் கடும் அடைந்து வருகின்றனர். மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


