பட்டுக்கோட்டை, அக்.24: பட்டுக்கோட்டை அருகே காடுவெட்டிவிடுதி, வெட்டிக்காடு பகுதிகளில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் திருவோணம் தாலுக்கா, காடுவெட்டிவிடுதி பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மேரி கோல்டு (செண்டிப்பூ) மற்றும் புடலை, பாகற்காய் மழையினால் பாதிப்பு ஏற்பட்டு அழுகிப்போனது.
உடனே மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருவோணம் தாசில்தார் சுந்தரமூர்த்தி, திருவோணம் தோட்டக்கலை அலுவலர் திவ்யா மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து வெட்டிக்காடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை தாசில்தார் சுந்தரமூர்த்தி பார்வையிட்டார். அப்போது விவசாயிகள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், சாகுபடி செய்யப்பட்டு அழுகிப்போன செண்டிப்பூக்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தாசில்தார் சுந்தரமூர்த்தியிடம் கோரிக்கை வைத்தனர்.


