வல்லம், நவ. 19: தஞ்சையில் நேற்று முன்தினம் அதிகாலையில் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். தஞ்சை விளார் சாலை காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பிரவீன்ராஜ்(20). திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த இவர் நேற்று முன்தினம் 17ம் தேதி அதிகாலை தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு டீக்கடைக்கு சென்றார்.
தஞ்சை ஆர்எம்எஸ் காலனி அருகே சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பிரவீன் ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீன் ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


