தஞ்சாவூர், செப்.19: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள சாலியமங்கலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் வெங்கட் சுப்ரமணியன் தலைமை வகித்தார். முதுநிலை மேலாளர் பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்று பேசினார்.
முகாமில் பாரத் இயற்கை வழி வேளாண்மை திட்ட இயக்குனர் அசோக்சாரங்கன் கலந்து கொண்டு, இயற்கை வழி வேளாண்மையால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், செயற்கை வழி விவசாயத்தால் உண்டாகும் தீமைகள் குறித்தும், இயற்கை வழி வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு வங்கி சார்பில் வழங்கப்படும் சலுகைகள், வங்கி கடன் உதவிகள் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து இயற்கை வழி வேளாண்மை குறித்த காணொளி விவசாயிகளுக்கு ஒளிபரப்பப்பட்டது. இதில் சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான முன்னோடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வங்கி கிளை மேலாளர் அருண்குமார் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.