பேராவூரணி, நவ. 18: தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்(எஸ்ஐஆர்) பணிகளில் ஊழியர்களுக்கு நெருக்கடியை அளிக்கும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, வட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயதுரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு சங்கம், தமிழ்நாடு கிராம ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வருவாய்த்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்களை தற்கொலைக்கு தூண்டும் எஸ்ஐஆர் பணிக்கு தேர்தல் ஆணையம் போதிய அவகாசம் அளிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப் பணிகளுக்கு நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை என்று ஒரு மாத காலம் என்று அறிவித்து விட்டு, 10 நாட்களுக்குள் பணிகளை முடிக்கச் சொல்லி நெருக்கடி அளிக்கும் போக்கை கைவிட வேண்டும். தினசரி 3 வேளையும், வாரம் 7 நாட்களும் கூகுள் மீட் நடத்தி குரல் வளையை நெரிக்கின்ற நடவடிக்கையை கைவிட வேண்டும். இரவு பகல் பாராமல் பெண் ஊழியர்களை அலுவலகத்திற்கு வரச் சொல்லி பணிகளை முடிக்கச் சொல்லி சித்திரவதை செய்யக்கூடாது. எஸ்ஐஆர் பணிகளுக்கு 3 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். கணினியில் பதிவேற்றம் செய்ய போதிய கணினிகள், கணினி பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


