தஞ்சாவூர், செப்.17: தஞ்சாவூர் அருகே தளவாபாளையம், கத்தரிநத்தம், ராராமுத்திரைகோட்டை வழியாக தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகின்றன. இதற்காக, தஞ்சை அருகே உள்ள கிராமங்களில் ரயில் வரும் போது 25 நிமிடத்திற்கும் மேலாக கேட் மூடப்படுகிறது. இதனால், காலையில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள், விவசாயப் பணிக்கு செல்லக்கூடிய விவசாயிகள், அரசு ஊழியர்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகு நேரமாக காத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
அதேபோல், 25 நிமிடத்திற்கும் மேலாக ரயில்வே கேட் மூடப்படுவதால் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கத்தால் முதியோர்கள் மயக்கம் அடைந்து அந்தப் பகுதியிலேயே சுருண்டு விழுவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, ரயில்வே அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு கேட்டை மூடும் நேரத்தை குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.