தஞ்சாவூர்,அக்.14: தஞ்சாவூர் மாவட்டத்தில் பின் தங்கிய மகளிர்கள் இ.ஆட்டோ வாங்க கடன் அளிக்கப்படுகிறது என்று கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சர் 2025-26 நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு ரூ.3 லட்சம் வரை மின்சார பேட்டரியில் இயங்கும் இ.ஆட்டோ வாங்கிட கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள 25 வயது முதல் 45 வயது வரை உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மகளிருக்கு மூன்றாண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ.3இலட்சம் வரையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
இக்கடனைப் பெற தகுதியுள்ள அனைவரும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை மேலாளர்களை அணுகி உரிய விவரங்களைப் பெற்று விண்ணப்பத்தை அளித்துக் கடன் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.