தஞ்சாவூர், செப்.12: காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளினால் பூமித்தாயைக் காப்பதற்காக ‘ஈகோ கிளப் மிஷன் லைஃப்’ ஒரு மரம் என் தாய்க்காக நடுதல் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் 1 லட்சத்து 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
குருங்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி மாணவர்கள் தாயாருடன் வருகை தந்து மாணவருக்கு ஒரு மரக்கன்று வீதம் 100 மரக்கன்றுகள் தங்கள் வீடுகளில் நடுவதற்கு பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்விற்கு தஞ்சாவூர், ‘கவின்மிகு தஞ்சை இயக்கத்தின் தலைவர் மருத்துவர் ராதிகா மைக்கேல் முன்னிலை வகித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுற்றுச்சூழல் மன்ற முத்தமிழ்ச்செல்வி, நுளிர் இயக்க இயக்குநர் ராஜகுரு மற்றும் உறுப்பினர் தமிழ்மாறன். குருங்குளம் கிழக்கு அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியக் கழகத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமையாசிரியர் கனகசபை விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.