ஒரத்தநாடு, செப்.10: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்திற்குட்பட்ட பஞ்சநதி கோட்டை, காசாநாடு தெக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை நிரந்தரமாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயிடம் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர், கோவிந்தராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மனு அளித்தனர். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய் கூறியதாவது; 100 நாள் பணி அனைத்து பொதுமக்களுக்கும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. வேலை நாட்கள் குறைவாக கொடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து அவர்களுக்கு 100 நாள் வேலை நிரந்தரமாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.