பேராவூரணி, டிச.8: பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் திருச்சி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர். செருவாவிடுதி உடையார் தெரு அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் திருச்சி வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) ராமநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளஞ்சியம், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் ரசியா மற்றும் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியை சாருமதி, ஆகியோருடன் திருச்சி வானொலி நிலையத்திற்கு சென்ற மாணவர்கள் பாட்டு பாடுதல், பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு நாடகம், தலைவர்கள் பற்றிய உரை, நீதிநெறி கதைகள், பழமொழி சொல்லுதல், உள்ளிட்ட தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தினர். மாணவ, மாணவிகள் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பதிவு செய்யப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் வருகின்ற டிச 27 அன்று வானொலியில் ஒளிபரப்பு செய்யப்படும்.


